நம்பிக்கை இழக்காதே

1. வாழ்க்கை எப்பொழுதுமே எளிதானதல்ல

நாம் அனைவருமே பல கனவுகளோடும், திட்டங்களோடும், ஆசைகளோடும், எதிர்பார்ப்புகளோடும் நம் வாழ்க்கை என்னும் பயணத்தைத் துவக்குகிறோம். உற்சாகத்தோடு நம் எதிர்காலத்தைத் திட்டமிடுகிறோம். நாம் எதிர்காலத்தில் எப்படியிருக்கவேண்டும், எங்கெங்கே போகவேண்டும், என்னென்ன செய்யவேண்டும் என்று மிகவும் உற்சாகமாகத் திட்டமிடுகிறோம். ஆனால், நம் வாழ்க்கைப் பயணத்தில் நாம் எதிர்பாராவிதத்தில் ஏதோ சில காலகட்டங்களில் பெரும் புயல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. வாழ்க்கை எப்பொழுதுமே இலகுவாக இருப்பதில்லை. சில கதைகளில் வருவதுபோல வாழ்க்கை இலகுவாக இருக்கவேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் அது அப்படி இருப்பதில்லை. எதிர்பாராத சவால்களையும், சங்கடங்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. அந்த நேரங்களில் நாம் போட்ட திட்டங்கள், கனவுகள் தகர்ந்துபோகிறது. அப்பொழுது நம்பிக்கையில்லாத சூழநிலைக்குள் சிக்கிக்கொண்டதாக உணர்கிறோம். நம்பிக்கை இழந்து போகிறோம். “என் திட்டங்கள் ஒருபோதும் நடைபெறப்போவதில்லை என்று சொல்லி, போட்ட திட்டங்களைக் கைவிட்டு விடுகிறோம். நம் எதிர்பார்ப்புகள் நிறைவேறப்போவதில்லை என்ற தீர்மானத்திற்கு வருகிறோம்.

சிலவேளைகளில், நம் வாழ்வில் நாம் எதிர்பாராத திருப்பங்களையும் சூழ்நிலைகளையும் சந்திக்க நேரிடுகிறது. அதை எதிர்கொள்ள நாம் முற்றிலும் தயாராகாத சூழ்நிலையில் இருப்போம். எல்லா பக்கங்களிலும் கதவுகள் அடைக்கப்பட்டது போலவும், எந்த திசையில் செல்வது என்று குழம்பி நிற்பது போன்ற சூழ்நிலையை அடைகிறோம். இந்த புத்தகத்தை வாசிக்கிற நீங்களும் ஒருவேளை அதுபோன்ற சூழ்நிலையில் இருக்கலாம். அது ஒருவேளை நீங்கள் செய்கிற வேலையாகவோ, தொழிலாகவோ, படிப்பாகவோ, குடும்ப சூழ்நிலையாகவோ, திருமண வாழ்வாகவோ இருக்கலாம். ஏனெனில், வாழ்வில் எந்த சந்தர்ப்பத்தில் அப்படிபட்டவைகள் நேரிடும் எனக் கூற இயலாது. ஆனால், அவ்வாறான மரித்த, நம்பிக்கையற்ற சூழ்நிலையை மாற்ற வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள கடவுள் இருக்கிறார். அவர் நம்பிக்கையற்ற சூழ்நிலையை தலைகீழாக மாற்றும் சக்தியுள்ளவர். அவர் உங்கள் அருகில் இருப்பதை நீங்கள் உணர்ந்தால், நம்பிக்கையற்ற சூழ்நிலைகளில் நம்பிக்கை பிறக்கும். நீங்கள் வெற்றிபெற்றவர்களாக வலம் வருவீர்கள். உங்கள் நம்பிக்கையை இழந்துபோகாதிருக்க இந்த புத்தகம் எளியமுறையில் உங்களை உற்சாகப்படுத்தும்.

நம்பிக்கை மிகவும் அவசியமானது

நம்பிக்கை என்பது மிகவும் அவசியமானது. நம்பிக்கை என்பது நாம் குறிப்பிட்ட ஒன்றை கனவுகண்டு, அதை ஆசையோடு எதிர்பார்த்து காத்திருப்பதாகும். கிறிஸ்தவ வாழ்வின் மிகமுக்கியமான அம்சம் என்பது இந்த எதிர்பார்ப்பாகும். கிறிஸ்தவ வாழ்வின் மிகமுக்கிய அம்சங்களாக மூன்றை வேதாகமம் வலியிறுத்துகிறது.

1 கொரிந்தியர் 13:13

இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.

மரித்த, நம்பிக்கையற்ற சூழ்நிலையை மாற்றவே வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள கடவுள் இருக்கிறார். நம்பிக்கையற்ற சூழ்நிலையை நீங்கள் எதிர்பார்ப்போடு இருக்கும் சூழ்நிலையாக மாற்ற அவர் சக்தியுள்ளவர். அவர் உங்கள் சூழ்நிலையை மாற்றுவாராக!

2. நம்பிக்கை—கிறிஸ்தவ வாழ்வின் மிகமுக்கிய அம்சம்

இயேசுவை நம்பி வாழ்கிறவர்களாகிய நாம் எதிர்காலத்தில் நடைபெறப்போகும் பல காரியங்களை எதிர்பார்த்து வாழ்கிறோம்.

<>உயிர் குறித்த எதிர்பார்ப்பு

தீத்து 1:3

பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம்பண்ணி, அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி…

நித்திய உயிர் நமக்குக் கிடைப்பது குறித்த எதிர்பார்ப்பு நமக்கு இருக்கிறது. அந்த நித்திய உயிர், நம் ஆவியில் நமக்குள் இருந்தபோதிலும், அந்த உயிரோடு புதிய உடலில் வாழப்போவது குறித்த எதிர்பார்ப்பு நமக்கு இருக்கிறது.

மகிமையான வாழ்வு குறித்த எதிர்பார்ப்பு

கொலோசெயர் 1:27

புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.

நமக்கு ஒரு மகிமையான வாழ்வைத் தருபவர் இயேசு கிறிஸ்து மட்டுமே என்ற எதிர்பார்ப்பில் நாம் வாழ்கிறோம். நாம் இப்பொழுது வாழும் இந்த உலகைவிட சிறப்பானதொரு புதிய உலகில் நாம் வாழப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பைத் தருபவரும் அவர்தான். அந்த உலகில் கடவுளுடைய பிரசன்னத்தோடு, அவரோடு சேர்ந்து நாம் வாழப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் வாழ்கிறோம்.

அழிவிலிருந்து காப்பாற்றப்படுதல் குறித்த எதிர்பார்ப்பு

1 பேதுரு 1:7-9

அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.

அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து, உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்.

நம் வாழ்வு காப்பாற்றப்படுவது இங்கே துவங்கினாலும், அதில் ஒரு பங்கு நிறைவடைவதற்காக நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

கிறிஸ்துவின் வருகை குறித்த எதிர்பார்ப்பு

தீத்து 2:13

நாம் நம்பியிருக்கிற ஆனந்தபாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.

உயிரோடு எழுதல் குறித்த எதிர்பார்ப்பு

1 தெசலோனிகேயர் 5:8

பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.

3. நம்பிக்கையின் அவசியம்

நம்முடைய அனுதின வாழ்க்கையில் நம்பிக்கை மிகவும் அவசியமானதாகும். நம்பிக்கை அற்ற சூழ்நிலையில் கூட நாம் நம்பிக்கை நிறைந்த மக்களாக வாழவேண்டும். நாம் அவ்வாறாக தொடர்சியான நம்பிக்கையில் ஏன் வாழ வேண்டும் என்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது.

எதிர்பார்த்தது கிடைக்காதபொழுது, உள்ளான மனிதன் பெலவீனப்படுகிறான்

நீதிமொழிகள் 13:12

நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.

சிலவேளைகளில் நாம் எதிர்பார்த்தது நமக்குக் கிடைக்க தாமதங்கள் ஆகலாம். சில காரியங்களை குறிபிட்ட வருடத்தில் செய்துமுடிக்க நாம் எதிர்பார்க்கலாம். ஆனால், அந்த வருட முடிவில் கூட அது முடியாமல் போகலாம். உடனே, சரி அடுத்தவருடம் அதை முடித்துவிடலாம் என நாம் நினைக்கலாம். ஆனால், அடுத்த வருடமும் அது நடைபெறாமல் போகலாம். அவ்வாறாக, தொடர்ந்து எதிர்பார்த்தும் அது நடைபெறாதபொழுது நம் மனம் மிகவும் சோர்வடைந்து போகிறது. அதேவேளையில் நாம் எதிர்பார்த்தது நடந்துவிட்டால், நம் வாழ்க்கையில் ஏதோ ஒன்று புதியதாக துளிர்விட்டது போன்ற புத்துணர்வு ஏற்படும். நம் வாழ்வு புதுப்பிக்கப்பட்டது போன்ற உணர்வு ஏற்படும். அதன்மூலம் நம் வாழ்வில் முன்னேறிச் செல்ல நாம் உந்தப்படுகிறோம்.

நம்பிக்கை நம் ஆத்தும நங்கூரம்

எபிரேயர் 6:19

அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது.

நம்பிக்கை நம் ஆத்துமாவிற்கு நங்கூரம் போன்றது. ஆத்துமா என்ற வார்த்தை நம்முடைய மனது, விருப்பம், உணர்வுகளை உள்ளடக்கியதாகும். நம்பிக்கையோடு நம் ஆத்துமாவை இணைக்க, ஒரு கப்பலை ஒரு இடத்தில் நிறுத்தப் பயன்படுத்தும் நங்கூரம் என்ற வார்த்தை இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு கப்பலுடைய நங்கூரம், கடலுக்கடியில் போடப்படும்பொழுது, ஒரு புயலின் நடுவில் சிக்கிய கப்பல் ஒரு நிலையான சூழ்நிலைக்குக் கொண்டுவரப்படுகிறது. ஆகவேதான், ஆத்துமாவின் நங்கூரம், ‘நம்பிக்கை’ என்று வேதம் கூறுகிறது. அதன் பொருள் என்னவென்றால், எனக்கு நம்பிக்கை இல்லையென்றால், என்னுடைய விருப்பம், உணர்வு, சிந்தைகள் அடங்கிய ஆத்துமா குழப்பமான ஒரு சூழ்நிலையில் நிலையற்றதாக, பெலனற்றதாக மாறிப்போகிறது. மக்கள் முற்றிலும் நம்பிக்கையற்றவர்களாகப் போகும்பொழுது, வாழ்வில் தாக்கும் புயல்களால், தொடர்ந்து முன்னேற இயலாமல் போகிறார்கள். நம்பிக்கையை இழந்து எளிதில் முயற்சியைக் கைவிட்டு விடுகிறார்கள். இனிமேல் வாழ்வதில் ஒரு பயனும் இல்லை என்ற முடிவுக்கு வருகிறார்கள். நம்பிக்கை இழந்த சூழ்நிலையில், “என்னை ஒருவரும் கண்டுகொள்வதில்லை! எல்லாம் தவறாகவே நடக்கிறது! இந்த சூழ்நிலை ஒருபோதும் சரியாகப்போவதில்லை” என்ற சிந்தைகள் அவர்கள் மனதை நிரப்புகிறது. அவ்வறான சூழ்நிலைகளில் சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆகவேதான், எவ்வளவு மோசமான சூழ்நிலைகளை சந்திக்க நேர்ந்தாலும் நம்பிக்கையை இழக்காதிருப்பது மிகவும் அவசியம். நம்பிக்கையே நம் ஆத்துமாவின் நங்கூரம்.

நம்பிக்கைக்கு முன்வரவேண்டியது எதிர்பார்ப்பு

எபிரேயர் 11:1

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

நம்பிக்கை எதிர்பார்ப்பைச் சார்ந்து இருப்பதால், எதிர்பார்ப்பு மிக அவசியமானதாகும். எதிர்பார்ப்பு நம்பிக்கைக்கு முன்னாக வரவேண்டியுள்ளது. நமக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்பொழுதுதான், அதன்மீது நம்பிக்கை வரும். ஒருவர் மிகவும் மோசமான வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கும்பொழுது, மருத்துவர் சொல்கிறார், “இவரால் இன்னும் ஒருசில நாட்கள்தான் உயிர்வாழ முடியும்” என்று, அந்த சூழ்நிலையில் எல்லோருமே நம்பிக்கை இழந்து போகிறார்கள். உடனே அவருடைய கடைசி கால புவிவாழ்வு, கடைசி வார்த்தைகள், அவரை அடக்கம் பண்ணும் எண்ணங்கள்தான் மக்கள் மனதை நிறப்புகிறது. அவ்வாறாக, ஒருவருக்கு எதிர்பார்ப்பு அற்றுப்போகும்பொழுது, நம்பிக்கைக்கு ஒரு இடமும் இல்லாமல் போகிறது. ஏனெனில், எதிர்பார்ப்பு என்பது நம்பிக்கை வருவதற்கு துணைசெய்யும் ஒன்றாகும். ஒருவருக்கு வியாதி குணமாகும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் போகும்பொழுது, கடவுளிடமிருந்து சுகம்பெறும் நம்பிக்கையும் மிகவும் கடினமாகிப் போகிறது. கடவுள் மீது வைக்கும் நம்பிக்கைக்கு, எதிர்பார்ப்பு முதலாவது தேவைப்படுகிறது. வியாதிபட்டு மரணப்படுக்கையில் இருக்கிற ஒருவருக்கு, அந்த வியாதி குணமாகி நன்றாக நடப்பேன் என்ற எதிர்பார்ப்பு முதலாவது வரவேண்டும். ஒருவேளை மருத்துவர்கள் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்று சொன்னால் கூட, எல்லாவற்றையும் படைத்த கடவுளால் இது முடியும், என்ற எதிர்பார்ப்போடு இருக்க வேண்டும். அந்த எதிர்பார்ப்பு முழுவதும் குணமாகும் நம்பிக்கையை அவருக்குக் கொண்டுவரும்.

4. நம்பிக்கையற்ற சூழ்நிலையை தலைகீழாக மாற்றும் கடவுள்

நாம் எவ்வளவு மோசமான சூழ்நிலையைச் சந்திக்க நேர்ந்தாலும், அது எவ்வளவுதான் அதிகமான நம்பிக்கையற்ற சூழ்நிலையாக இருந்தாலும், அந்த சூழ்நிலையை மாற்ற வல்ல கடவுள் ஒருவர் இருக்கிறார் என்ற புரிதல் மிகவும் அவசியமானதாகும். ஆமென்! அவ்வாறான நம்பிக்கையற்ற சூழலை ஒருவேளை நீங்கள் உங்கள் திருமண வாழ்வில் சந்திக்கலாம், உங்கள் வேலைகளில் சந்திக்கலாம், உங்கள் பிள்ளைகளைப் பற்றியிருக்கலாம், உங்கள் பொருளாதாரம் சார்ந்ததாக இருக்கலாம், உங்கள் தொழில் சார்ந்ததாக இருக்கலாம், உங்கள் படிப்பு அல்லது வேறு எதுவாகக்கூட இருக்கலாம். அது எதுவாக இருந்தலும், அது எவ்வளவுதான் மிக மோசமான நம்பிக்கையே இல்லாத சூழ்நிலையாக இருந்தாலும், அதை மற்ற வல்ல கடவுள் மேலேயே நம் மனதெல்லாம் இருக்க வேண்டும். அவர் மாற்றுவார் என்ற எதிர்பார்ப்பை நாம் ஒருபோதும் விட்டுவிடக்கூடாது. வேதாகமத்தில் நமக்கு மிகவும் தெரிந்த, அவ்வாறான நம்பிக்கையற்ற சூழ்நிலைகளை கடவுள் எப்படி மாற்றினார் என்று நாம் இப்பொழுது பார்க்கலாம்.

ஏழையான பெண்

ஒருவர் தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் மிகுந்த கடன்களையும் விட்டுவிட்டு, தன் மனைவியையும் விதவையாக்கிவிட்டு மரித்துப்போகிற ஒரு சம்பவத்தை வேதாகமத்தில் (2 இராஜா 4:1-7) வாசிக்கிறோம். அவருக்கு கடன்கொடுத்தவர்கள் வந்து அவளை மிரட்டி கடனைத் திருப்பித்தா இல்லையேல் உன் பிள்ளைகளை விற்றுவிடு என்கிறார்கள். அவளுடைய சூழ்நிலை எவ்வளவு பரிதாபமான, நம்பிக்கையற்ற சூழ்நிலை என்று பாருங்கள். அவள் கடவுளுக்கு ஊழியம் செய்த எலிசா என்பவரிடம் செல்கிறாள். தன்னுடைய சூழ்நிலையை விவரித்து அவரிடம் உதவி கேட்கிறாள். எலிசா அவளிடம், “உன் வீட்டில் என்ன இருக்கிறது?” என்று கேட்கிறார். அதற்கு அவள், “என் வீட்டில் ஒரு பாத்திரத்தில் எண்ணை மாத்திரம் தான் இருக்கிறது” என்கிறாள். உடனே எலிசா அவளிடம், “நீ போய் உன்னால் எவ்வளவு பாத்திரங்களை வாங்க முடியுமோ, அவ்வளவு பாத்திரங்களை வாங்கி, அதில் அந்த எண்ணையை ஊற்று” என்கிறார். அதிசயமாக அவள் ஊற்றின பாத்திரங்கள் அனைத்தும் எண்ணை நிறம்புகிறது. பின்பு எலிசா அவளிடம், “நீ அந்த எண்ணையை விற்று, உடன் கடன்களையெல்லாம் தீர்த்தபின்பு, உன் வாழ்வை புதியதொரு வாழ்வாக துவக்கு” என்கிறார். கடவுள் அவ்வாறாக அவளுடைய நம்பிக்கைற்ற சூழ்நிலையை அந்த அற்புதம் மூலமாக தலைகீழாக மாற்றுகிறார்.

திருமாண விருந்தில் நடந்த அற்புத நிகழ்ச்சி

திருமண வீட்டிற்கு விருந்தளிகளை அழைத்து விருந்துகொடுக்கும்பொழுது, திராட்சைப் பழச்சாறு தீர்ந்துபோய்விட்டது. அது ஒரு சிறிய காரியமாக இருந்தாலும், விருந்து கொடுப்பவர் மனதில், இந்தக் கூட்டத்தை எப்படிச் சமாளிப்பது என்று நம்பிக்கையை இழந்து திகைக்க வைக்கிற சம்பவமாகும். அவர்கள் அனைவரும் திகைத்துக்கொண்டிருக்கும்பொழுது, இயேசுவின் தாயாகிய மரியாள், “இயேசு உங்களிடம் என்ன செய்யச்சொல்கிறாரோ அதுபோலவே செய்யுங்கள்” என்று பந்தியில் பறிமாறுகிறவர்களிடம் சொன்னார். இயேசு அவர்களிடம், “நீங்கள் இந்த கல்சாடிகளில் தண்ணீரை நிறப்புங்கள். பின்பு, அதிலிருந்து எடுத்துக்கொண்டுபோய் பறிமாறுங்கள்” என்றார். அதிசயிக்கும் விதமாக அந்தத் தண்ணீர் திராட்சைப் பழச்சாறாக மாறியது. விருந்து சாப்பிட வந்திருந்தவர்கள் அனைவருக்கும் திருப்பதியாகப் பறிமாறப்பட்டது (யோவான் 2:1-11). அறப்புதமாக கடவுள் அவர்கள் தேவையைச் சந்தித்தார். ஆண்டவர் நம்மிடம் என்ன ஆலோசனை சொல்லுகிறாரோ அதைக்கேட்டு, நடக்கும்பொழுது, நம்முடைய நம்பிக்கையற்ற சூழ்நிலையை அவர் மாற்றுகிறார்.

நம்பிக்கையற்ற இருளான சூழ்நிலையிலிருந்து ஒரு விடியல்

லூக்கா 5ம் அதிகாரத்தில், மீன்பிடிக்கும் தொழில் செய்த யாக்கோபு, யோவான், அந்திரேயாவோடு இயேசு சேர்ந்தபொழுது, அவர்கள் மீன்பிடி தொழிலில் ஒரு அற்புதம் நிகழ்ந்தைப் பார்க்கிறோம். அவர்கள் தொழிலே மீன்பிடிப்பதுதான். அவ்வாறு ஒருநாள் அவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருக்கும்பொழுது, முழு இரவும் ஒரு மீனும் கிடைக்காமலேயே பொழுதுவிடிந்தது. அன்று காலையில் அவர்கள் வெறும்கையோடும், ஏமாந்த முகத்தோடும் வீடு திரும்ப ஆயத்தமாகும்பொழுது இயேசுவைச் சந்திக்கிறார்கள். அன்று காலையில் அவருடைய பிரசங்கத்தைக் கேட்க கூடிய மக்களிடம் பேச, இயேசு அவர்களிடம், “உங்கள் படகு கொஞ்ச நேரம் கிடைக்குமா?” என்று கேட்கிறார். அவர்கள் சரி என்று சொல்ல, அந்தப் படகில் ஏறி இயேசு பிரசங்கம் செய்கிறார். பிரசங்கம் முடிந்ததும் இயேசு பேதுருவிடம், “இன்னும் ஒருமுறை நீங்கள் தண்ணீருக்குள் சென்று வலைவீசுங்கள் உங்களுக்கு அதிக மீன்கள் கிடைக்கும்” என்கிறார். அதற்குப் பேதுரு “ஐயா நாங்கள் இரவு முழுவதும் பாடுபட்டு ஏமாந்துபோய் வந்துள்ளோம்; இருந்தபோதிலும், உங்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, இப்பொழுது வலைவீசிப் பார்க்கிறோம்” என்கிறான். (லூக்கா 5:5). தன் முயற்சியில் ஒரு பலனும் கிடைக்கவில்லை என்று பேதுருவுக்குப் புரிந்திருந்த போதிலும், இயேசுவின் சொல்லுக்குக் கட்டுப்படச் சம்மதித்தான்.

நம் ஆண்டவரின் ஒரே ஒரு வார்த்தை, நம்பிக்கையற்று சூழ்நிலையை தலைகீழாக மாற்றியது. ஆண்டவரின் வார்த்தைக்குப் பேதுரு கீழ்படிந்தபடியால், ஒரு பொருளாதார அற்புதத்தைப் பார்க்கச் செய்தது.

இஸ்ரவேல் சமுதாயம்

ஒரு காலகட்டத்தில் இஸ்ரவேல் சமுதாய மக்கள் இந்த உலகமெங்கும் சிதறடிக்கப்பட்டுப் போயிருந்தார்கள். அவர்களுக்கு மீண்டும் ஒன்று சேருவோம் என்ற நம்பிக்கை முற்றிலும் இல்லாமல் இருந்தது. எசேக்கியேல் 37ம் அதிகாரத்தில், ஒரு பள்ளத்தாக்கு முழுவதும் நிறைந்து கிடந்த எலும்புகளைப் பார்க்கிறார். இஸ்ரவேல் மக்களின் நிலையைத்தான் அவரை அவ்வாறு கடவுள் பார்க்கச் செய்தார். தேவ மனிதனே! இந்த எலும்புகள் அனைத்தும் இஸ்ரவேல் சமுதாய மக்களின் நிலையாகும். “எங்கள் எலும்புகள் காய்ந்துபோய்விட்டது! எங்களுக்கு ஒரு நம்பிக்கையும் இல்லை! நாங்கள் முற்றிலும் வெட்டுண்டு போய்விட்டோம்” என்று இஸ்ரவேல் மக்களே சொன்னார்கள (எசே. 37:11).

கடவுள் எசேக்கியேலை அந்த எலும்புகளைப் பார்த்து தீர்க்கதரிசனம் சொல்லச்சொன்னார். ஆகவே அந்த தீர்க்கதரிசி அந்த எலும்புகளிடம், “கடவுள் உங்களோடு சொல்வது என்னவென்றால்: என்னுடைய மக்களே கேளுங்கள், நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து, உங்களை வெளியே வரப்பண்ணுவேன்; உங்களை இஸ்ரவேல் நாட்டில் சேரப்பண்ணுவேன்” (எசே.37:12) இஸ்ரவேல் மக்கள் மீண்டும் ஒன்றாக சேறுவார்கள். அவர்களுக்கு ஒரு நாடு கிடைக்கும் என்று அந்த தீர்க்கதரிசி மூலமாக, கடவுள் முன்னறிவித்தார். அவர் அவ்வாறு முன்னறிவித்ததை மே 14, 1948 இல் நிறைவேற்றினார். உலகின் பல பகுதிகளில் சிதறப்பட்டுக் கிடந்த யூதர்கள் தங்களுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பி வரத் துவங்கினார்கள்.

ஆகவே, நாம் இனி ஒரு நம்பிக்கையும் இல்லை என்று எண்ணும் சூழ்நிலையை கடவுள் மாற்ற வல்லவர். கல்லறைகளைத் திறந்து, அங்கு மரித்து மண்ணாகிக்கொண்டிருந்தவர்களை, வெறும் எலும்புகளாய் கிடந்தவர்களை, அவரால் உயரோடு கொண்டுவர முடியும். கடவுளுக்கு நம்பிக்கை அற்ற சூழ்நிலை என்று எதுவுமே இல்லை.

ஆபிரகாமும் சாராளும்

கடவுள் ஆபிரகாம் சாராளோடு உங்கள் இருவருக்கும் ஒரு பிள்ளையைத் தருவேன் என்று வாக்குக்கொடுக்கும்பொழுது, அவர்கள் வயது முதிர்ந்தவர்களாக இருந்தார்கள். கடவுள் அவர்களுக்கு வாக்குக்கொடுக்கும் பொழுது, அது ஒரு ஆண் பிள்ளையாக இருக்கும், அவன்மூலம் உங்கள் சந்ததிகளை விண்ணில் உள்ள நட்சத்திரங்கள் போலவும், கடற்கரையில் உள்ள மணல்களைப் போலவும் ஏராளமாகப் பெறுகப்பண்ணுவேன் என்றார். அப்பொழுது, அவர்களுக்கு பிள்ளை பெறுவதற்கான சிறு நம்பிக்கைக்குக் கூட இடமில்லாதபடி இருந்தது. ஏனெனில், ஆபிரகாமிற்கு 99 வயது ஆகியிருந்தது. சாராளுக்கோ, பிள்ளையைக் கருவுறும் காலங்கள் முடிந்துபோயிருந்தது. அவர்கள் சூழ்நிலையை வேதம் இவ்வாறு கூறுகிறது:

ரோமர் 4:17-18

17 அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்.

18 உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.

நாம் பின்பற்றுவதற்கு ஆபிரகாம் எவ்வளவு அற்புதமான உதாரணம். ஆபிரகாம், நம்ப முடியாத ஒன்றை நம்பினார். அப்படி ஒன்று நடக்க எந்த சாத்தியமும் இல்லாதிருந்தும், கடவுள் சொன்ன வார்த்தையைக் கேட்டு அது நிச்சயம் நடக்கும் என நம்பினார். அவர் அவ்வாறு நம்பினபடியால், கடவுள் சொன்னபடியே அவர் வாழ்க்கையின் சூழ்நிலை மாறினது.

ஆகவே, கடவுள் உங்களுக்கு வாக்குத்தத்தங்களைக் கொடுக்கும்பொழது, “ஆண்டவரே! இதெல்லாம் சாத்தியமில்லை” என்று நீங்கள் ஒருபோதும் நினைக்காதீர்கள். செத்த ஒன்றிற்கு உயிர் கொடுக்கும் வல்லமையுள்ளவர், நம் கடவுள். ஆகையால், சாத்தியமில்லை என்று சொல்ல அவருக்கு ஒன்றுமே இல்லை. கடவுள் உங்களுக்கு வாக்குக்கொடுக்கும்பொழுது, அது ஒருவேளை சாத்தியமற்ற சூழ்நிலையாக இருக்கலாம். ஆனாலும், உங்களோடு பேசுகிற கடவுள் மரித்ததை உயிர்ப்பிக்கிறவர் என்பதையும், ஒன்று இல்லாதிருக்கும்பொழுதே, அது இருக்கிறதுபோல கூப்பிடுகிறவர் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ஒரு சாதகமற்ற சூழ்நிலையை அவர் மாற்றுகிறவர் மாத்திரமல்ல, அந்த சூழ்நிலையை அடியோடு தலைகீழாக மாற்றுகிறவர் என்பதையும் மறவாதீர்கள். இல்லாத ஒன்றை பார்க்க வைப்பார். உங்கள் வீட்டில் சமாதானமே இல்லாமல் இருக்கலாம், அங்கே அவரால் சமாதானத்தைக் கொண்டுவர முடியும். உங்கள் உடல்நிலை சரியாக சாத்தியமற்ற சூழ்நிலையில் நீங்கள் இருக்கலாம்; ஆனால், அவரால் அதைச் சாத்தியமாக்க முடியும். உங்கள் வேலையில், தொழிலில், வீட்டில் வெற்றி என்பது சாத்தியமற்றதாகத் இருக்கலாம்; ஆனால், அவரால் அதைச் சாத்தியமாக்க முடியும்.

5. நம்பிக்கை அற்ற சூழ்நிலையில் நம்பிக்கை வைக்கத் தேவையானவைகள்

நம்பிக்கையற்ற சூழ்நிலையில் நம்பிக்கை தருவது எது? நம்பிக்கை என்பது வெறும் சிந்தனை சார்ந்த ஒன்றா? நேர்மறையான எண்ணங்கள்தான் நம்பிக்கையா? நேர்மறையான, நல்லதே நடக்கும் என்ற எண்ணங்கள் மட்டுமா நம்பிக்கை என்பது? உண்மையான நம்பிக்கை என்பது, கடவுளின் சத்தியத்தின் அடிப்படையில், அவருடைய வார்த்தையின் அடிப்படையில் எதிர்மறையான சூழலை எதிர்நோக்குவதே நம்பிக்கை ஆகும்.

ரோமர் 4:18

உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.

அவர் எப்படி நம்பினார் என்றால், "நீ அனேக சமுதாயத்தார்களுக்குத் அப்பாவாக இருப்பாய்; உன்னுடைய சந்ததிகளை எண்ணிப்பார்க்க முடியாது" என்று கடவுள் அவருக்குக் கொடுத்த வாக்கை, நம்ப முடியாதபடி இருந்தபோதும், அதை அவர் நம்பினார். (எளிய தமிழ்)

நம்புவதற்கு சாத்தியமே இல்லாத ஒன்றை கடவுள் சொன்னபடியால் ஆபிரகாம் அதை நம்பினார். நம்பிக்கை அற்ற சூழ்நிலையிலும், அதை நம்பினார். ஏனெனில், அதைச் சொன்னது கடவுள்! அவர் சொன்னது நடக்கும் என்ற எதிர்பார்ப்போடு அதை நம்பினார். அந்த எதிர்பார்ப்புதான் நம்பிக்கையின் அஸ்திபாரம். கடவுள் அதைச் சொல்லும்பொழுது, அது நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லாதபோதும் அதை அவர் நம்பினார்.

கடவுளும் அவர் சொல்லும் வார்த்தைகளும்தான் நம் நம்பிக்கைக்கு அஸ்திபாரம்

சங்கீதம் 38:15

கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடுப்பீர்.

சங்கீதம் 130:5

கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.

ரோமர் 15:4

தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.

அநேக காலங்களுக்கு முன்பே, கடவுளுடைய புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள காரியங்கள் அனைத்தும் நமக்கு புத்தி சொல்லிக் கொடுப்பதற்காக எழுதப்பட்டவைகள். நாம் எவ்வாறு நம்முடைய கஷ்டங்களையெல்லாம் சகித்து, கடவுள் நமக்கு தருவேன் என சொன்னவைகளை எதிர்பார்த்து, உற்சாகத்துடன் வாழவேண்டும் என நாம் கற்றுக் கொள்வதற்காகவே அவைகள் எழுதப்பட்டுள்ளன.

நம்முடைய நம்பிக்கைக்கு காரணமும், ஆதாரமும், பெலனுமாக இருப்பவர் கடவுள். அவருடைய வார்த்தையே நம்முடைய நம்பிக்கைக்கு அடிப்படை ஆதாரமாகும். அவருடைய வேதம் நம்முடைய இருதயத்திற்கு பொறுமையையும், ஆறுதலையும் கொடுக்கிறபடியால் நாம் தொடர்ந்து நம்பிக்கையோடு வாழ்கிறோம்.

நம்முடைய நம்பிக்கைக்கு காரணமும், ஆதாரமும், பெலனுமாக இருப்பவர் கடவுள். அவருடைய வார்த்தையே நம்முடைய நம்பிக்கைக்கு அடிப்படை ஆதாரமாகும். அவருடைய வேதம் நம்முடைய இருதயத்திற்கு பொறுமையையும், ஆறுதலையும் கொடுக்கிறபடியால் நாம் தொடர்ந்து நம்பிக்கையோடு வாழ்கிறோம்.

நம்பிக்கையின் எதிர்காலம்

நாம் இதுவரை வாசித்தவைகளின் நடைமுறை சாத்திங்களை இப்பொழுது பார்க்கலாம். இதை வாசிக்கிற உங்களில் சிலர், “என்னுடைய எதிர்காலத்தைக் குறித்த எந்தவிதமான நம்பிக்கையும் எனக்கில்லை” அல்லது, “நான் வெகுகாலம் வாழப்போவதில்லை. இனி என் வாழ்க்கையில் நல்லது எதுவும் நடக்கப்போவதில்லை” என்று நினைக்கலாம். நான் உங்களுக்குச் சொல்வது என்னவென்றால், கடவுளாலும், அவருடைய வார்த்தையாலும் உங்களுக்கு ஒரு எதிர்காலம் உண்டு என்பதை நீங்கள் நம்பலாம். அவருடைய வார்த்தை இவ்வாறு சொல்லுகிறது:

1 கொரிந்தியர் 2:9

எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.

நமக்கு எதிர்காலத்தில் நல்லதொரு வாழ்க்கை இருக்கிறது. நம் எதிர்காலத்தில் அற்புதமான ஒரு வாழ்க்கை நமக்காக் காத்திருக்கிறது. ஏனெனில், கடவுள் மீது அன்பாக இருக்கிறவர்களுக்கு அப்படியொரு வாழ்வை அவர் ஆயத்தம்பண்ணி வைத்துள்ளதாக அவருடைய வார்த்தை கூறுகிறது.

எரேமியா 29:11

நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.

அவருடைய வார்த்தைதான் நம் நம்பிக்கையின் ஆதாரம். ஆகவே, நமக்கு நல்ல ஒரு எதிர்காலம் இருக்கிறது என்று நாம் நிச்சயம் நம்பலாம். நம்முடைய தற்காலிக சூழ்நிலை, ஒருபோதும் நம்முடைய கடைசி காலம்வரை தொடரப்போவதில்லை. கடவுள் நமக்கு கொடுத்த வாக்குத்தத்தங்களின் அடிப்படையில் நம்முடைய எதிர்காலம் பெலமுள்ளதாக, வெற்றியுள்ளதாக, பாதுகாப்பு நிறைந்ததாக அமையப்போகிறது. நம்முடைய தற்காலிக சூழ்நிலை நம் மனதைச் சோர்வாக்க ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை.

வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கை

நம் வாழ்வில் நாம் கடைசிவரை தோல்விகளைத்தான் சந்திக்க வேண்டுமோ? வெற்றி ஒருபோதும் இல்லையோ? என உங்களில் சிலர் நினைக்கலாம். உங்கள் முயற்சிகள் ஒவ்வொன்றிலும் தோல்விகளை அடைந்திருக்கலாம். இதுவரை வெற்றி என்பது உங்களுக்கு எட்டாக் கனியாக இருந்திருந்திருக்கலாம். நீங்கள் பின்வரும் கடவுள் வார்த்தையை உறுதியாக நம்பவேண்டும்:

சங்கீதம் 1:1-3

1 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,

2 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

3 அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

திரளாக கனிகொடுக்கும் மரங்களாக உங்கள் வாழ்வை நினைத்துப் பாருங்கள். நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி பெறுவீர்கள் என்று எண்ணுங்கள். ஏனெனில், அதுதான் உங்களைப் பற்றிய கடவுளுடைய வார்த்தை. கடவுள் உங்களுக்காகச் செய்ததை தற்காலிக சூழ்நிலை அழிக்க இடம் கொடாதீர்கள்.

உங்கள் கனவுகள் நிகழ்வாகும் நம்பிக்கை

நீங்கள் கண்ட கனவுகள் ஒருபோதும் நடக்கப் போவதில்லை என்று உங்கள் நம்பிக்கைகளை இழந்திருக்கலாம். உங்களிடம் கடவுள் சொல்கிறார்:

சங்கீதம் 37:4-5

4 கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.

5 உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.

நான் கண்ட கனவு ஒருபோதும் நிகழ்ப்போவதில்லை என்ற சூழ்நிலையை நான் சந்தித்திருக்கிறேன். நான் வளரும்பொழுது, பெங்களூர் நகரில் ஒரு சபையை ஸ்தாபித்து, உலகமெங்கும் உள்ள அநேக சமுதாயங்களைச் சந்திக்க வேண்டும் என்று கனவு கண்டேன். பல சம்பவங்கள் என் வாழ்வில் நிகழ்ந்தது, ஆனால் நான் கண்ட இந்தக் கனவு என்வாழ்வில் நிகழப்போவதில்லை என்ற சூழ்நிலையை நான் சந்திக்க நேர்ந்தது. அதற்கான ஒரு முதல் அடி கூட எடுத்துவைக்க முடியவில்லை. ஆனால், கடவுளுடைய வார்த்தை உனக்கு நல்ல எதிர்காலத்தைத் தருவேன் என்ற நம்பிக்கையைக் கொடுத்தபடியால், என் நம்பிக்கை செத்துப்போக நான் இடம்கொடுக்கவில்லை. என் கண்களுக்குத் தெரியாத அதை, என் காதுகளுக்குக் கேளாத அதை அவர் எனக்காக ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறார். மேலும், அவர்மீது நான் மனமகிழ்ச்சியாய் இருந்தால், அவர் என் இருதயத்தின் வேண்டுதல்களைக் கொடுப்பார் என்று அவருடைய வார்த்தை மேலும் சொல்லுகிறது. என் சூழ்நிலை மேலும் மேலும் மோசமாகிக்கொண்டிருக்கும்பொழுது, கடவுளுடைய இந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் என் மனதில் ஞாபகமாக வந்துகொண்டே இருந்தது. என்னுடைய சூழ்நிலைகள் எப்படியிருந்தாலும், அவருடைய வார்த்தைகளை ஆதாரமாக வைத்து, அவைகளை உறுதியாக பிடித்துக்கொண்டேன். ஆகவே, இப்பொழுது அந்தக் கனவுகள், நிகழ்வதை நான் பார்க்கிறேன்.

உங்கள் பிள்ளைகளைக் குறித்த நம்பிக்கை

உங்கள் பிள்ளைகளைக் குறித்த நம்பிக்கைகளை நீங்கள் இழந்திருக்கலாம். ஒருவேளை நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கடவுளுடைய வார்த்தைகளைச் சொல்லிக்கொடுத்து, ஆவிக்குரிய பயிற்சிகளை அளித்து நன்கு வளர்த்திருந்தபோதிலும், இப்பொழுது அவர்களுடைய நடவடிக்கைகளைப் பார்க்கும்பொழுது, நீங்கள் எதிர்பார்த்திராத ஒரு சூழலில் அவர்கள் சிக்கியிருப்பதைப் பார்க்கலாம். ஒருவேளை அவர்கள் படிப்பை கைவிட்டு, மதுவுக்கோ, போதை வஷ்துகளுக்கோ அடிமையாகி இருக்கலாம். நான் வளர்த்ததெல்லாம் வீணாகப் போய்விட்டதே என்று நீங்கள் நினைக்கலாம். இனி ஒரு மாற்றமும் வரப்போவதில்லை, என்று உங்கள் பிள்ளை மீதான நம்பிக்கையை நீங்கள் முற்றிலும் இழந்திருக்கலாம். ஆனால், நான் உங்களுக்குச் சொல்வது, “நம்பிக்கை இழந்துபோகாதிருங்கள்”. ஏனெனில், கடவுளுடைய வார்த்தை இப்படிச் சொல்கிறது:

சங்கீதம் 112:1-2

1 அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

2 அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.

“கடவுளே! நான் உங்கள் வார்த்தையை நம்புகிறேன்! என் பிள்ளைகள் பலத்திருப்பார்கள் என்று உங்களுடைய வார்த்தைகள் சொல்கிறது.” என்று அவரிடம் சொல்லுங்கள். இதின் பொருள் என்னவென்றால் உங்கள் பிள்ளைகள் இந்த பூமியிலே ஏதோ ஒரு விதத்தில் மாறப்போகிறார்கள். கடவுளுடைய நாட்டிற்காக அவர்கள் எதையோ செய்யப்போகிறார்கள். அவர்கள் இந்த பூமியில் வீணாகப் போகப்போவதில்லை. அவர்கள் கடவுளுக்காக இந்த பூமியில் எதையோ சாதிக்கப்போகிறார்கள்.

ஏசாயா 54:13

உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.

மேலுள்ள வசனம் உங்கள் பிள்ளைகளைக் குறித்த நம்பிக்கைக்கு ஆதாரமாக இருப்பதாக. நீங்கள் சொல்வதையெல்லாம் உங்கள் பிள்ளை காதுகொடுத்துக் கேட்காவிட்டாலும், தொடர்ந்து அந்த வார்த்தையை நம்புங்கள். ஏனெனில், கடவுள் சொன்ன அந்த வார்த்தையை நீங்கள் தொடர்ந்து நம்பலாம்.

சுகமடைதல் குறித்த நம்பிக்கை

உங்கள் சிலர் வியாதிகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம். மருத்துவர்களும் இந்த வியாதிக்கு மருந்தோ, மருத்துவமோ இல்லை என்று சொல்லியிருக்கலாம். ஆனால், கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது என்றால்:

சங்கீதம் 103:3

அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,

உங்கள் நம்பிக்கைக்கு ஆதாரம் கடவுளுடைய இந்த வார்த்தைதான். இந்த வார்த்தை மூலம் உங்கள் நம்பிக்கையை உயிரோடு இருக்கச் செய்யுங்கள். உங்கள் வியாதி குணமாகி நீங்கள் நல்ல சுகத்தோடு வாழ்வதை நீங்களே எண்ணிப்பாருங்கள்.

நீதிமொழிகள் 3:7-8

7 நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.

8 அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.

இவ்வாறாக கடவுள் மீது நீங்கள்க் கொண்டுள்ள பயம், உங்கள் உடலில் உள்ள வியாதியைக் குணப்படுத்தி, சுகத்தைக் கொண்டுவரும்.

கடவுளாலும் அவருடைய வார்த்தையாலும், நம்பிக்கை அற்ற சூழ்நிலையிலும் நம்பிக்கையோடு இருக்க முடியும்.

6. நம்பிக்கையற்ற சூழ்நிலையில் நான் என்ன செய்வது?

ரோமர் 4:17-21

17 அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்.

18 உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.

19 அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.

20 தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல்,

21 தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.

நம்முடைய நம்பிக்கையற்ற சூழ்நிலையை கடவுள் தலைகீழாக மாற்றவேண்டி, நாம் என்ன செய்யவேண்டும்? ஆபிரகாமுடைய வாழ்விலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? அவருடைய நம்பிக்கையற்ற சூழ்நிலையை கடவுள் தலைகீழாக மாற்றும்படமாக அவர் என்ன செய்தார்? அவருக்கு கடவுள் என்ன வாக்குக்கொடுத்தாரோ அது நடக்கும் என்று அவர் நம்பினார் என்று அவருடைய வேதம் சொல்லுகிறது. (ரோமர் 4:18). கடவுள் என்னவெல்லாம் சொன்னாரோ, அதெல்லாம் நடக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? உதாரணமாக, “நீ செய்வதெல்லாம் உனக்கு வாய்க்கும்” என்று கடவுளுடைய வார்த்தை சொல்லுகிறது. அதை நீங்கள் நம்புகிறீர்களா?

கடவுள் என்ன சொன்னாரோ அதுபோலவே நடக்கும் என்ற எதிர்பார்ப்போடு நம்புங்கள்.

கடவுளும் அவர் வார்த்தையும் ஒன்றுதான். அவருடைய வார்த்தையை நம்புவதும் அவரை நம்புவதும் ஒன்றுதான். அவருடைய வார்த்தையின்படி நீங்கள் எதிர்பார்க்கிற எல்லாவற்றையும் நீங்கள் நம்ப வேண்டும். நம்ப முடியாத சூழநிலையில் நீங்கள் இருந்தாலும், கடவுள் கொடுத்த வாக்கின்படி நிச்சயம் நடக்கும் என்று நீங்கள் நம்ப வேண்டும். உங்களுடைய இந்த நம்பிக்கையை நீங்கள் ஒருபோதும் விட்டுவிடாதிருங்கள்.

உங்களுடைய நம்பிக்கை அற்ற சூழ்நிலை, கடவுள் சொன்ன வார்த்தையின்மீதுள்ள நம்பிக்கையை இழக்க ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்.

“ஏனெனில், கடவுள் அவரிடம் இந்த வாக்கை கொடுக்கும்பொழுது, அவருக்கு கிட்டத்தட்ட 100 வயது ஆகியிருந்தபடியால், தன்னுடைய உடலில் பிள்ளை உருவாகத்தக்க பெலன் இல்லாதிருந்தது; அவருடைய மனைவியாகிய சாராளுக்கும் கர்ப்பமடையும் வயது தாண்டியிருந்தது. அப்படியிருந்தும், கடவுள் சொன்ன வாக்கை நம்புவதில் அவர் இளமையாக இருந்தார்.”

அவருடைய உடலில் பிள்ளைபெற்றெடுக்கும் பெலன் இல்லை. அவருடைய சூழ்நிலை ஒன்றும் சாதகமாக இல்லை. இருந்தபோதிலும், கடவுள் கொடுத்த வாக்கின்மீதான தன்னுடைய நம்பிக்கை பெலவீனமடைய அவர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. ஆகவே, உங்கள் சூழ்நிலையைப் பார்த்து, இது ஒருபோதும் நடக்காது என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்.

இருந்தபோதிலும், நீங்கள் உங்கள் சூழ்நிலையை முற்றிலும் நிராகரிக்க வேண்டியதில்லை. ஆனால், கடவுள் வார்த்தையின் மீதுள்ள நம்பிக்கையை உங்கள் சூழ்நிலையை வைத்து பலமிழக்கச் செய்ய அனுமதிக்காதீர்கள். மாறாக, கடவுள் கொடுத்த வாக்கு உங்கள் வாழ்வில் நிறைவேறினால் எப்படியிருக்கும் என்பதை உங்கள் கற்பனைக் கண்கொண்டு வரைந்துபாருங்கள். உதாரணமாக, நீங்கள் முற்றிலும் குணமடைந்ததைக் நினைத்துப் பாருங்கள். உங்கள் வாழ்வில் வெற்றியடைந்ததாக நினைத்துப் பாருங்கள். உடைந்துபோன உங்கள் திருமண உறவு சீரடைந்ததாக நினைத்துப் பாருங்கள். உங்கள் பிள்ளைகள் மனம்திரும்பி கடவுளுக்கு சேவை செய்வதாக நினைத்துப் பாருங்கள். கடவுள் வார்த்தையால், உங்கள் மனதில் இவைகளை ஒரு படம்போல வரைந்து, அவைகளை திரும்பத் திரும்ப நினைத்துப் பாருங்கள்.

ஒருநாள் இரவு ஆபிரகமை கடவுள் அவனுடைய கூடார வீட்டிலிருந்து வெளியே வரச்சொல்லி, வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் பார்க்கச் சொல்லி, “உன்னுடைய சந்ததிகள் அதுபோல இருக்கும்” என்றார். (ஆதியாகமம் 15:5). அதுமுதல் ஆபிரகாம் கடவுள் தனக்குக் கொடுத்த வாக்கு இவ்வாறாக நிறைவேறும் என்று அந்தக் காட்சியை தன் மனதில் வைத்திருந்தார். அதன்பின்பு, அவன் வானத்தில் நட்சத்திரங்களைப் பார்க்கும்பொழுதெல்லாம், தன் சந்ததிகளை அவ்வாறு எண்ணிக்கைக்கு அடங்காத அளவில் இருப்பதைப் பார்த்தான். அவன் தன் உடலில் பிள்ளையைப் பெற்றெடுக்கப் பெலனில்லாததை நினைக்கும் பொழுது, தன் மனைவி சாராள் கர்ப்பமடையும் வாய்ப்பு இல்லாத சூழ்நிலையைப் பார்க்கும் பொழுதும், கடவுள் சொன்ன அந்த வாக்கை நினைத்துப் பார்த்து. என் சந்ததிகள் வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போல, கடற்கரையில் உள்ள மணலைப்போல எண்ணமுடியாத அளவில் இருக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்தார்.

அனேக முறை நான் ஆயிரமாயிரமான மக்களுக்கு கடவுளுடைய வார்த்தையைச் சொல்லிக்கொடுப்பதை நினைத்துப் பார்த்திருக்கிறேன். எங்களுடைய திருச்சபை, நகரத்தில் 5 இடங்களில் பல ஆயிரம் மக்களோடு சேர்ந்து கடவுளை ஆராதிப்பதை நினைத்துப் பார்த்திருக்கிறேன். ஆகவே, ஞாயிறு ஆராதனையில் காலியாகக் கிடந்த இருக்கைகள் என்னுடைய அந்த நம்பிக்கையைப் பெலவீனப்படுத்த முடியவில்லை. ஏனெனில், என்னுடைய ஊழியத்தின் நிறைவு நாட்கள் எப்படியிருக்கும் என்ற படம் என் மனதில் அழியாது நின்றது. ஆகவே, உங்களுடைய தற்காலிக சூழ்நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், உங்கள் வாழ்வின் முடிவைக் குறித்த உங்கள் எதிர்பார்ப்பை மனதில் இருத்தி, நம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடாதிருங்கள்.

தொல்லைகளைச் சகித்து, வாக்குப்பெற்றதை அடைந்தே தீருவது என்ற தீர்மானத்தோடான வாழ்வு

ஆபிரகாமின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் இன்னொரு முக்கியமான காரியம், அவர் தடுமாற்றங்கள் எதுவும் இல்லாது, கடவுள் சொன்ன வாக்கை நம்பி வாழ்ந்தார் (ரோமர் 4:20). கடவுள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவார் என்று உறுதி அவர் மனதில் இருந்தது. அதற்கிடையில் பல தொல்லைகள் வந்தபோதிலும் அவைகளைச் சகித்து, கடவுள் கொடுத்த வாக்கை அடைந்தே தீருவது என்ற தீர்மானத்தோடு வாழ்ந்தார். ஆகவே, நம்பிக்கையோடு கூட, கடவுள் கொடுத்த வாக்கை அடைந்தே தீருவது என்ற தீர்மானத்தோடு, இடையில்வரும் தொல்லைகளைச் சகித்து, வாழவேண்டியது மிகவும் அவசியம். ஆகவேதான், “நாம் இதுவரை முழுமையாக அனுபவிக்காத ஒன்றை, அனுபவிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்பொழுதல்லவா, அதற்காக பொறுமையோடும், ஆவலோடும் காத்திருப்போம்?” என்று ரோமர் 8:25-ல் சொல்லப்பட்டுள்ளது. நம்மில் அனேகர், அனேக காரியங்களுக்காக நம்பிக்கையோடு இருந்தாலும், அது உடனே நடக்கவேண்டும் என நினைக்கிறோம். ஆனால், வேதமோ, நாம் எதிர்பார்க்கிற இதுவரை பார்க்காத ஒரு காரியத்திற்காக பொறுமையோடு காத்திருக்க வலியுறுத்துகிறது. ஆகவே, சீக்கிரம் நடக்கவில்லை என்று நம்பிக்கையை இழக்காது, பொறுமையோடு காத்திருங்கள்.

1 தெசலோனிக்கேயர் 1:3

“எப்படியெனில், நீங்கள் கடவுளை நம்பி செய்கிற கஷ்டமான வேலைகளையும், மற்றவர்கள் மீது உங்களுக்கு உள்ள அன்பால் அவர்களுக்கு உதவுகிறதையும், நம் வாழ்வை ஆளும் இயேசு கிறிஸ்துவிடம் உங்களுக்கு கிடைக்கப்போகிற பலனை எதிர்பார்‍த்து நீங்கள் கஷ்டங்களைச் சகிக்கிறதையும், நினைத்து அவருக்கு நன்றி கூறுகிறோம்.” என்று பவுல் கூறுகிறார்.

ஆகவே, கடவுளுடைய வார்த்தையின்படியான நம்பிக்கை என்பது பொருமையோடு காத்திருப்பதாகும்.

புலம்பல் 3:26

கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.

உண்மையான நம்பிக்கை இருக்கும்பொழுது, மனதில் எந்தவித பதற்றமும் இல்லாமல் ஒருவித அமைதி காணப்படும். அது நிச்சயம் வரும், நடக்கும் என்ற எண்ணம் மேலோங்கி காணப்படும். உங்கள் மனதில் குழப்பமோ, சஞ்சலமோ, நான் விரும்பியதை அடைவதற்கு யார், என்ன செய்தாலும் பரவாயில்லை என்ற எண்ணமோ இல்லாதிருக்கும். மாறாக, கடவுள் கொடுத்த வாக்கின்படி எனக்கு நடக்கும் என்ற மன அமைதி காணப்படும். அதில் உறுதியாகவும், பொறுமையோடும் இருப்பீர்கள். அந்த தீர்மானத்தில் உறுதியோடும், கடவுள் வார்த்தைக்கு தொடர்ந்து கீழ்படிந்தும் வாழ்வீர்கள். ஆகவே, இலகுவான வழி என்று எதையும் நீங்கள் தெரிந்தெடுக்க வேண்டாம். அவ்வாறான செயல் உங்களை மேலும் குழப்பத்தில் சிக்க வைக்கும்.

சந்தோசத்தில் நிறைந்து கடவுளைத் தித்துக்கொண்டிருங்கள்

கடவுள் சொன்னது நடக்குமோ? நடக்காதோ? என்று அவர் சந்தேகப்படாமல்; கடவுள் ஒரு வாக்கைக் கொடுத்தால், அவர் அதை நிச்சயம் நிறைவேற்றுவார் என்று அவரை முழுமையாக நம்பி, அவருக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தார் (ரோமர் 4:20-21).

உங்களுக்கு ஒன்றின்மீது ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்பொழுது, மனதில் மகிழ்ச்சி இருக்கும். கடவுள் சொன்ன ஒரு சொல்மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கும்பொழுது உங்கள் மனதில் சந்தோசம் இருக்கும். உங்கள் வாழ்வின் ஒருசில சூழ்நிலைகளின் அடிப்படையில் நீங்கள் ஒருசில வேளைகளில் சந்தோசமாக இருக்கலாம். ஆனால், நம்பிக்கையின் அடிப்படையிலும் நீங்கள் சிலவேளைகளில் சந்தோசமாக இருக்கலாம். உங்களில் சிலர் சிறுவர்களாக இருக்கும்பொழுது, உங்கள் பிறந்தநாள் நெருக்கிவருவதை எதிர்பார்த்து சந்தோசப்பட்டிருப்பீர்கள். எங்களுடைய மகள் ரூத், இவ்வருடம் அவளுடைய பிறந்தநாளைக் கொண்டாடினாள். பிறந்தநாள் வருவதற்கு பல வாரங்களுக்கு முன்பே முதல் வாரத்திலேயே அவள் மனதில் சந்தோசம் நிரம்பியிருந்தது. எதிர்பார்ப்பினால் அவள் மனது சந்தோசத்தில் நிறைந்து இருந்தது. பிறந்த நாளுக்கு முந்தய இரவில் அவள் என்னோடு, “அப்பா நான் நாளைக் காலை எழுந்தவுடன், நீங்கள் என்னிடம், ‘பிறந்தநாள் காணும் செல்லப் பிள்ளையே! காலைவணக்கம்!’ என்று சொல்லவேண்டும்” என்று சந்தோசத்தோடு கூறிப் படுக்கச் சென்றாள். உண்மை என்னவென்றால், மறுநாள்தான் அவள் பிறந்தநாள் கொண்டாகப் போகிறாள்; ஆனால் இன்றே அவள் மனதில் சந்தோசம் நிரம்பி வழிகிறது. அவளுடைய பிறந்த நாள் இன்னும் வரவில்லை. ஆனால் வரும் என்ற எதிர்பார்ப்பில் அவள் மனதில் சந்தோசம். கிறிஸ்தவர்களாகிய நாமும் அவ்வாறே சந்தோசமாக இருக்கவேண்டும். நாம் கடந்து செல்லும் இந்த கஷ்டமான சூழ்நிலையை கடவுள் நிச்சயம் மாற்றுவார் என்ற எதிர்பார்ப்பில் கிடைக்கும் சந்தோசம் அது.

ரோமர் 15:13

பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.

அவ்வாறாக கடவுள் வாக்குக்கொடுத்ததை நிறைவேற்றுவார் என்ற எதிர்பார்ப்பையும் அவரே நமக்குத் தருகிறார். நீங்கள் அவரை அவ்வாறாக நம்பி வாழ்வதால், அவர் உங்களுக்கு நிறைவான சந்தோசத்தையும், சமாதானத்தையும் தருவாராக. அதன்மூலமாக, சுத்தமான ஆவியானவர் தரும் பெலத்தினாலே, அவரிடம் இவ்வாறான எதிர்பார்ப்பு உங்களுக்கு பெருகுவதாக. (எளிய தமிழில்)

ரோமர் 12:12

நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.

விடாமல் ஜெபித்துக்கொண்டு, உங்களுக்குக் கிடைக்கப்போகிற வாழ்க்கை எதிர்பார்த்து, உங்களுக்கு வருகிற கஷ்டங்களைச் பொறுமையோடு சகித்துக்கொண்டு, சந்தோசமாக இருங்கள். (எளிய தமிழில்)

நம் மனது கடவுள் மீதுள்ள நம்பிக்கையில் நிறைந்து காணப்படும்பொழுது, நம் மனதில் சந்தோசமும் சமாதானமும் இருக்கும். அவருடைய வார்த்தையில் நாம் நம்பிக்கையோடு இருக்கும்பொழுது, சந்தோசமும் சமாதானமும் நம் வாழ்வில் இருக்கும். சிலவேளைகளில் கடவுள் கொடுத்த வாக்கு நிறைவேற தாமதமாகும்பொழுது, சிலர் குறைகூறவும், புலம்பவும் தொடங்குகிறார்கள். அவர்களுக்கு தேவை என்னவென்றால், கடவுள் சொன்ன வாக்கு நிறைவேறிய சம்பவத்தை மனதில் கொண்டுவருவதாகும். தற்போதைய சூழ்நிலையைப் பார்த்து அதைரியப்படாமல், நம்பிக்கையோடு அந்த வாக்கு நிறைவேறுகிறதை நம் கண்முன் கொண்டுவரவேண்டும். அப்பொழுது, அந்த காட்சி ஒருநாள் நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கையில் மனதில் சந்தோசமும், சமாதானமும் இருக்கும்.

சங்கீதம் 42:5

என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்.

உடனே நான் என் மனதிடம், "ஏங்‌காதே என் மனமே! கடவுள் நிச்சயம் உனக்கு உதவி செய்வார் என நம்பிக்கையோடு காத்திரு; கடவுள் நிச்சயம் உன் கஷ்டங்களைத் தீர்ப்பார்; அவர் உதவி உனக்கு கிடைத்தவுடன், (மகிழ்ச்சியோடு) அவருக்கு நன்றி சொல்லும் வாய்ப்பு மீண்டும் உனக்கு கிடைக்கும்" என்று சொன்னேன். (எளிய தமிழில்)

சங்கீதம் 71:14

நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.

நமக்கு கடவுள் சொன்ன வாக்கின்மீது நம்பிக்கை இருக்கும்பொழுது, நம் மனதில் சந்தோச உணர்வுகள் காணப்படும், அதின் விளைவாக கடவுளை புகழ்ந்து பேசும் சக்தி நமக்கு கிடைக்கிறது. “இந்த கஷ்டமான சூழ்நிலையில் நான் எப்படி சந்தோசமாக இருக்கமுடியும்?” என்று நீங்கள் ஒருவேளை கேட்கலாம். ஆனால், “நம்பிக்கையிலே சந்தோசமாக இருங்கள்” என்று வேதம் சொல்கிறது. கடவுளை நாம் எப்படித் துதிக்க முடியும்? அவர் கொடுத்த வாக்கின்மீது நம்பிக்கை வைத்தினால் மாத்திரமே அவரை நாம் துதிக்க முடியும். ஒருவேளை இன்றைய சூழ்நிலை மிகமோசமான சூழ்நிலையாக இருக்கலாம். இன்றைய சூழ்நிலை மிக கஷ்டமான சூழ்நிலையாக இருக்கலாம். இருந்தபோதிலும், கடவுளை நீங்கள் துதிக்கலாம். ஏனெனில், அந்த சூழ்நிலை என்றுமே அப்படி இருக்கப்போவதில்லை. கடவுள் அதை மாற்றப்போகிறார். ஏனெனில், வேதம் கூறுகிற கடவுள், நம்பிக்கையற்ற சூழ்நிலையை அதற்கு நேர்மாறாக மாற்றுகிற கடவுளாகும். அவ்வாறு உங்கள் வாழ்விலும் அவர் செய்வார். நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்திருங்கள்.

நாம் பாடும் ஒரு பாடல் உண்டு. அந்தப் பாடலின் வரிகள் மிகவும் உற்சாகமூட்டும் வரிகளாகும்:

கடவுளைத் துதி

உங்கள் பாடுகளின் உச்சத்தில் நீங்கள் இருக்கும்பொழுது
உங்கள் கனவுகளையெல்லாம் அது சிதறடிக்கும்பொழுது
உங்கள் நம்பிக்கைகளையெல்லாம் அவை சுக்குநூறாக உடைத்தெரியும்பொழுது,
சாத்தானின் திட்டங்கள் வெளிப்படுகிறது
உங்கள் மனம் குழம்பித் தவிக்கிறது
உலகில் காணப்படும் பயம் உங்களைக் கவ்விப் பிடிக்கிறது
எந்த நம்பிக்கையில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களோ
அதுவே மறைந்துவிடும்போல் இருக்கிறது

(பல்லவி)
கடவுளைத் துதியுங்கள்
அவரைத் துதிக்கிறவர்கள் மூலமாக அவர் தன் வேலைகளைச் செய்கிறார்
கடவுளைத் துதியுங்கள்
நம் கடவுள் துதிகள் மத்தியில் வாசம் செய்கிறார்
கடவுளைத் துதியுங்கள்
உங்களைக் கட்டிவைத்திருப்பது போன்ற சங்கலிகள் கூட
அந்தச் சங்கலிகளுக்கு ஒரு சக்தியும் இல்லை என்பதை நினைப்பூட்டும்
நீங்கள் அவரைத் துதிக்கும்பொழுது

சாத்தான் ஒரு பொய்யன்
நாம் ஒரு கோமாளிகள் என்று அவன் நம்மை
நினைக்க வைக்க விரும்புகிறான்
ஆனால், அவனுக்கே தெரியும்
நாம் இராஜாவின் பிள்ளைகள் என்பது
ஆகவே, நம்பிக்கை என்ற கேடகத்தை கையில் பிடியுங்கள்
ஏனெனில், நாம் வெற்றிபெற்ற யுத்த வீரர்கள்
இயேசு கிறிஸ்து ஏற்கனவே மரணத்திலிருந்து உயிரோடு எழுந்துவிட்டார்
ஆகவே, அவர் யுத்ததில் ஜெயித்த இராஜாவாகும்

டே ஸ்பிரிங் (வோர்ட்) 1979 மூலம் ஹீட் த கால் என்ற இம்பிரியல் பாடல் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது. ப்ரொவௌன் பென்னிஸ்டர் மற்றும் மைக் ஹட்சன் எழுதி இசையமைத்த பாடல்.

இந்த புத்தகத்தை வாசிக்கிற நீங்கள், “நான் வாழும் சூழ்நிலை முற்றிலும் நம்பிக்கையற்ற ஒரு சூழ்நிலை” என்று சொல்லலாம். அது உங்கள் திருமண வாழ்வு சம்பந்தமாக இருக்கலாம், உங்கள் குடும்ப வாழ்வு சம்பந்தமாக இருக்கலாம், உங்கள் பிள்ளைகளுடைய வாழ்வு சம்பந்தமாக இருக்கலாம், உங்கள் பொருளாதாரம் சம்பந்தமாக இருக்கலாம், உங்கள் தொழில், வேலை, வியாபாரம் சம்பந்தமாக இருக்கலாம். நாம் அனைவருமே அதுபோன்ற சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடுகிறது. ஆகவே, “உங்கள் நம்பிக்கையை ஒருபோதும் இழந்துபோகாதிருங்கள்” என்று நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன். நம்பிக்கையை இழந்துபோகாதிருப்பது மிகவும் அவசியமானதாகும். ஏனெனில், நீங்கள் நம்பிக்கையை இழக்கும்பொழுது, உங்கள் உள்ளான மனிதனில் பெலனை இழந்து போகிறீர்கள். நீங்கள் நம்பிக்கையை இழக்கும்பொழுது, புயல் வீசும்பொழுது நங்கூரம் இடாத கப்பல்போல இருக்கிறீர்கள். கடலில் மூழ்கும் கப்பல் போல உங்கள் வாழ்வு மாறுகிறது. நம்பிக்கையை இழக்கும்பொழுது, கடவுள் கொடுத்த வாக்கின்மீது உங்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் போகிறது.

கடவுள் மீதும், அவர் கொடுத்த வாக்கின்மீதும் நம்பிக்கையோடு இருங்கள். உங்கள் வாழ்க்கையைப் பற்றி கடவுள் சொன்ன வார்த்தைகளை மீண்டும் மீண்டும் நினைத்துப் பாருங்கள். உங்கள் திருமண வாழ்வு பற்றி, உங்கள் குடும்பம் பற்றி அவர் என்னென்ன வாக்குகள் கொடுத்திருக்கிறார்? அந்த வாக்குகளை உறுதியாக பிடித்துக்கொள்ளுங்கள். உங்கள் நம்பிக்கைக்கு ஆதாரமாக அவருடைய வாக்குகளை வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் கடவுள் வாக்குக்கொடுத்தால், உங்கள் தற்போதைய சூழ்நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், அவர் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவார்.

கடவுள் கொடுத்த வாக்கை நிறைவேற்றும்பொழுது நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்பதை உங்கள் மனக்கண்களில் கொண்டுவந்து பாருங்கள். உங்கள் நம்பிக்கை உயிரோடு இருக்க அது பேருதவியாக இருக்கும்.

எபேசியர் 3:20

நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு


  • கடவுள் சொன்னபடியே நடக்கும் என்ற எதிர்பார்ப்போடு நம்புங்கள்.
  • நம்பிக்கை அற்ற உங்கள் சூழ்நிலையால், கடவுள் சொன்ன வாக்கின்மீதான நம்பிக்கையை அழிக்க விடாதீர்கள்.
  • கடவுள் கொடுத்த வாக்கை அடைந்தே தீருவேன் என்ற தீர்மானத்தோடு அதற்கு எதிரிடையான எல்லாவற்றையும் பொறுமையோடு சகித்துக்கொள்ளுங்கள்.
  • கடவுள் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையினால் கிடைக்கும் சந்தோசத்தை அனுபவித்து, கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.